கரூரில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்
கரூரில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி உயர்வு, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்தியன் ஆசிரியர் கூட்டமைப்பு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கையை விளக்க உரையாற்றினார். இதனையடுத்து அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் ஊழியர்களுக்கு மலர்தூவி மறியலில் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.