பெரம்பலூரில் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது
பெரம்பலூரில் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பாலக்கரை ரவுண்டானா அருகே கூடினர். அங்கு அவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர் மரியதாஸ் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 47 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.