குறிச்சி மலைப்பகுதியில் மண்- மரங்கள் வெட்டி கடத்தல்: வருவாய்- வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு; 3 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்
குறிச்சி மலைப்பகுதியில் மண் மற்றும் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது ெதாடர்பாக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த 3 பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்த வன ஊழியர்களுக்கு மர்ம கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடத்தல்
அம்மாபேட்டை அருகே உள்ள சித்தார் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் சமூக நல காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மலைப்பகுதியில் அதிக அளவில் மான்கள், முயல்கள் மற்றும் பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தமிழ்நாடு வனத்துறை பராமரிப்பின் கீழ் உள்ள இந்த மலையின் ஒரு பகுதியில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண், வெள்ளை கற்கள் மற்றும் மரங்கள் இரவு, பகலாக வெட்டி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பொக்லைன் எந்திரங்களின் இரைச்சலால் இந்த மலைப்பகுதியில் வசித்த 300-க்கும் மேற்பட்ட மான்கள் இங்கிருந்து வெளியேறி விட்டன. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதுபற்றி அறிந்ததும் பவானி தாசில்தார் பெரியசாமி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வில் உசில், வெள்வேல், கொடைவேல், பாளை, வேம்பு உள்பட 122 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது.
பறிமுதல்- கொலை மிரட்டல்
அப்போது அந்த பகுதியில் மண் அள்ளிக்கொண்டிருந்த 3 பொக்லைன் எந்திரங்களை வன ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பொக்லைன் எந்திரங்களுக்கு வன ஊழியர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் பறிமுதல் செய்யப்பட்ட 3 பொக்லைன் எந்திரங்களையும் விடுவிக்க வேண்டும் என வன ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. உடனடியாக இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.