தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு தொடக்கம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இதய தமனி (ஆஞ்சியோ) ஆய்வக சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Update: 2021-02-04 23:18 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இதய தமனி (ஆஞ்சியோ) ஆய்வக சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. 

இதில் சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆய்வகப் சிறப்பு பிரிவை தொடங்கி வைத்தார். அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் இளங்கோவன், துணை முதல்வர் எழிலரசன், துணை நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

இதுகுறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டபோது, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மூலம் ரூ.3 கோடியே 65 லட்சம் செலவில் இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதய தமனி ஆய்வக சிறப்பு பிரிவு மூலம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட் இதய சிகிச்சை அளிக்க முடியும். அதிநவீன மருத்துவக்கருவிகள் கொண்ட இந்த ஆய்வகத்துடன், 10 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 

மாரடைப்பு ஏற்பட்டவர்களை மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப தேவையில்லை. அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். தற்போது முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இதய சிகிச்சை பெறமுடியும் என்றனர். 

பொதுவாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்