திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்த முயன்ற தொழிலாளி போக்சோவில் கைது

பல்லடத்தில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்த முயன்ற தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-02-04 22:11 GMT
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி மாயம்
பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த 15 வயது சிறுமி, கொரோனா விடுமுறை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த 10 நாட்களாக அருகே உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், மதிய உணவுக்கு வீட்டுக்கு வரவில்லை. 
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பனியன் நிறுவனத்துக்கு சென்று விசாரித்த போது அந்த சிறுமி வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே பல்லடம் போலீஸ் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மீட்பு
இதற்கிடையில் பனியன் நிறுவனத்துக்கு சென்று பெற்றோர் மீண்டும் விசாரித்தபோது அதே பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு வாலிபருடன் சிறுமி சென்றதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வாலிபர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த மாணிக்காபுரம் ரோடு வைரம் நகர் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. எனவே சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த வாலிபரை பல இடங்களில் தேடினார்கள். 

இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் அந்த வாலிபர் வீட்டிற்கு வந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது வீட்டின் உள்ளே அந்த சிறுமியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியையும், வாலிபரையும், போலீஸ் நிலையத்தில் பெற்றோர் ஒப்படைத்தனர். 

போக்சோவில் கைது
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சலிம் என்பவரின மகன் அஷ்ரப் (36) என்பதும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும், பல்லடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உதவியாளராக வந்த அந்த சிறுமியிடம், ஆசை வார்த்தைகளை கூறி, பாலியல் சீண்டல்கள் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, இவரது வீட்டிற்கு கூட்டிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்களின் புகாரின்பேரில் அஷ்ரப்பை ‘போக்சோ' சட்டத்தின கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்