கரியகாளியம்மன் கோவில் குண்டம் விழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

கரியகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

Update: 2021-02-04 22:01 GMT
கோபி, 

கோபி அருகே கோரக்காட்டூரில் கரியகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

தொடர்ந்து 1-ந்தேதி கிராமசாந்தி நடைபெற்றது. 2-ந் தேதி கொடியேற்றப்பட்டு, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுமங்கலி யாக பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று காலை 8 மணி அளவில் நடந்தது. தலைமை பூசாரி சண்முகம் முதலில் குண்டம் இறங்கினார். 

அவரைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள், பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். விழாவில் கோரக்காட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் தேர் உற்சவமும், நாளை (சனிக்கிழமை) மலர்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்