கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: 25 பேருக்கு பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.;

Update: 2021-02-04 21:33 GMT
கோப்புப்படம்
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 25 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் ஆந்திராவில் இருந்து கடலூர், பரங்கிப்பேட்டை வந்த 2 பேர், சென்னையில் இருந்து பண்ருட்டி வந்த 2 பேர், டெல்லி, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து என்.எல்.சி. வந்த 4 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தவிர சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 5 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 617 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 7 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இது வரை 285 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று ஒருவர் உயிரிழந்து உள்ளனார். இதன் விவரம் வருமாறு:-

பண்ருட்டியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா பாதித்த 42 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 22 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.107 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்