தர்மபுரி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்

தர்மபுரி அருகே லாரிகளை அபகரிக்க திட்டமிட்டு உரிமையாளரை கொலை செய்தது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2021-02-04 18:29 GMT
தர்மபுரி,

தர்மபுரியில் உள்ள அதியமான்கோட்டை பைபாஸ் சாலையின் ஓரப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் சிதைந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பென்னாகரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பது தெரியவந்தது. டிரைவரான அவர் லாரி உரிமையாளர் என்பதும் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

சுரேஷ்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், 4 லாரிகளை பைனான்ஸ் பெற்று வாங்கி உள்ளார். இந்த லாரிகளை நிர்வகிக்கும் பொறுப்பை அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான அரவிந்த்குமார் (25) என்பவரிடம், கொடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு ஏற்பட்டபோது லாரிகளுக்கு செலுத்தவேண்டிய தவணை தொகையை கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லாரி உரிமையாளர் இறந்து விட்டால் தவணை தொகையை செலுத்துவதில் சலுகைகள் கிடைக்கும். அதன் மூலம் அந்த லாரிகளை அபகரித்து தனக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என அரவிந்த்குமார் ஆசைப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக தனது நண்பர்கள் சிலரிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளார். பின்னர் சுரேஷ்குமாரை கொலை செய்ய கடந்த சில மாதங்களாக அரவிந்த்குமார் தனது நண்பர்களுடன் திட்டம் தீட்டி உள்ளார். இந்த திட்டத்தின்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்று வரலாம் என்று சுரேஷ் குமாரை காரில் அழைத்து வந்துள்ளனர். அப்போது அவரை சரமாரியாக தாக்கி அதியமான்கோட்டை பைபாஸ் சாலையில் வீசியுள்ளனர். அவர் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக அரவிந்த்குமார் அவருடைய நண்பர்களான எல்லப்பராஜ் (21) கோவிந்தராஜ் (28) ஆகிய 3 பேரை நேற்று தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய கார்த்தி என்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்