கடலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டி மணல் குவாரிகளை திறக்க வேண்டும்-கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு

கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பொன்னம்பலம், மாவட்ட செயலாளர் திருமுருகன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

Update: 2021-02-04 17:46 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களில் அரசு அனுமதித்த மணல் குவாரிகளில் அனுமதி சீட்டு பெற்று 5 ஆயிரம் தொழிலாளர்கள் மாட்டுவண்டிகளில் மணல் எடுத்து விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்தோம்.

ஆனால் அரசு இந்த மணல் குவாரிகளை ரத்து செய்து விட்டது. இதனால் 5 ஆயிரம் மாட்டு வண்டி தொழிலாளர்களும் உண்ண உணவின்றியும், மாடுகளுக்கு தீவனம் வைக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். மணல் கிடைக்காமல் கட்டுமான தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனின்லை. ஆகவே மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு வானமாதேவி, வான்பாக்கம், சன்னியாசிப்பேட்டை, எலந்தம்பட்டு, விலங்கல்பட்டு, திருமாணிக்குழி, அக்கடவல்லி, ஆயிப்பேட்டை, அம்புஜவள்ளிபேட்டை, இளமங்கலம்புதூர், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டி மணல் குவாரிகளை திறந்து, 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்