திருப்பூர் மாநகர காவல்துறைக்கு நவீன வசதிகளுடன் ஆளில்லா குட்டி விமானம்
திருப்பூர் மாநகர காவல்துறைக்கு நவீன வசதிகளுடன் ஆளில்லா குட்டி விமானம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர காவல்துறைக்கு நவீன வசதிகளுடன் ஆளில்லா குட்டி விமானம் வழங்கப்பட்டுள்ளது. இரவிலும் கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது.
ஆளில்லா குட்டி விமானம்
திருப்பூர் மாநகர காவல் நிலைய பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், முக்கிய பண்டிகைகள், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை போன்ற தினங்களை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், கடைவீதி பகுதிகளில் கண்காணிக்கவும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக நடைபெறும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்ற சமயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் உதவும் வகையில் ஆளில்லா குட்டி விமானம் திருப்பூர் மாநகர காவல் துறைக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தனியார் பனியன் நிறுவனத்தின் சார்பில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அதிக திறன் கொண்ட நவீன வகையிலான ஆளில்லா குட்டி விமானத்தை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் நேற்று வழங்கப்பட்டது.
அதிக திறன் மற்றும் நவீன வகையிலான ஆளில்லா குட்டி விமானத்தை கொண்டு இரவு நேரங்களிலும் எல்.இ.டி. விளக்கு மூலமாக இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை ஏற்படுத்தி கண்காணிக்க கூடிய வகையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி வசதி
4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று படம் பிடிக்க கூடிய தொழிநுட்பமும், மேலும் இரவு நேரங்களில் குற்றவாளிகளை கண்காணிக்கும் வசதி கொண்டதாக அமைந்துள்ளது. மேலும் கண்காணிப்பு அறையிலிருந்து கொடுக்கக்கூடிய உத்தரவுகளை 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இந்த ஆளில்லா குட்டி விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் தொழில்நுட்பம் வசதியும் உள்ளது.
இந்த குட்டி விமானத்தை கொண்டு முக்கியமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கண்காணிக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் உதவியாக இருக்கும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.