கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் கலெக்டர் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Update: 2021-02-04 16:33 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மருத்துவ களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள் என 11 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்தனர்.  

இவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை (கொரோனா சிறப்பு மருத்துவமனை) மற்றும் செஞ்சி, கண்டமங்கலம், காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வல்லம், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆர்வம் காட்டாத  முன்களப்பணியாளர்கள்

மேற்கண்ட மையங்களில் நாள் ஒன்றுக்கு தலா 100 பேர் வீதம் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கியது. இதனிடையே பிற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தகவல் பரவியதால் விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பதிவு செய்தவர்களில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. 

இதனால் குறைந்த அளவிலான முன்களப்பணியாளர்களே வந்து தடுப்பூசி போட்டுச்செல்கின்றனர்.இப்பணி தொடங்கப்பட்ட 20 நாட்களில் இதுவரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,257 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 649 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 291 பேரும் என இதுவரை 2,197 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் மற்றும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நேற்று காலை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
 
அதன் பிறகு கலெக்டரும், கூடுதல் கலெக்டரும் சுமார் அரை மணி நேரம் வரை அந்த மருத்துவமனையிலேயே அமர வைக்கப்பட்டு மருத்துவ குழுவினர் கண்காணித்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இந்நிகழ்வின்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்