சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வரவேற்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு

சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வரவேற்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Update: 2021-02-04 14:00 GMT
வேலூர்

சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம்  மலர்தூவி வரவேற்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சசிகலாவிற்கு வரவேற்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். 

இதற்கிடையே சிறையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

அதையடுத்து சசிகலா சிகிச்சைக்காக பெங்களூரு அரசு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த 31-ந் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர், டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். 

இதனை தொடர்ந்து வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) சசிகலா கார் மூலம் தமிழகம் திரும்புகிறார். பெங்களூருவில் இருந்து அவர் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டங்களின்  வழியாக சென்னைக்கு செல்ல உள்ளார். 

சென்னைக்கு செல்லும் சசிகலாவிற்கு அந்தந்த மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர். ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி

இந்த நிலையில் வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க அனுமதி அளிக்க வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், வேலூர் புறநகர் மாவட்ட அ.ம.மு.க. அமைப்பு செயலாளருமான ஜெயந்தி பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், ‘‘பெங்களூவில் இருந்து காரில் சென்னை நோக்கி வரும் சசிகலாவிற்கு வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரை அடுத்த கூத்தம்பாக்கத்தில் அ.ம.மு.க. சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க உள்ளோம். காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க தேவையான அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

 மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக கலந்தாலோசித்து அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் பிரசாரம்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 8-ந் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்டத்திலும், மாலையில் வேலூர் மாவட்டத்திலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதேநாளில் தான் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக சசிகலா சென்னைக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்