நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு டாக்டர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி
நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு டாக்டர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியான வந்தனர்.
கோவில்பட்டி,
நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு டாக்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக வந்தனர்.
மத்திய அரசின் முடிவை கண்டித்து
ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து மருத்துவ சங்கத்தினர் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது.
4-வது நாளான இன்று நெல்லையில் இருந்து கோவில்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் 25 பேர் பேரணியாக வந்தனர்.
வரவேற்பு
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நிறைவு பெற்ற இந்த பேரணிக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவர்கள் அறுசை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் இந்திய மருத்துவர் சங்கத்தின் கோவில்பட்டி கிளை செயலாளர் டாக்டர் பத்மாவதி, பொருளாளர் டாக்டர் கமலா மாரியம்மாள், முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் மோசஸ்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) கோவில்பட்டியில் இருந்து மருத்துவர்கள், டாக்டர் மோசஸ்பால் தலைமையில் விருதுநகர் நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி செல்கிறார்கள்.