காத்தாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
காத்தாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திலகர்திடல் மேல 5-ம் வீதியிலுள்ள விநாயகர், காத்தாயி அம்மன், அகோர வீரபுத்திரர், சன்னாசி சப்தமுனீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னர், புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்துச் சென்று வேதமந்திரங்கள் முழங்க சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள விநாயகர், காத்தாயிஅம்மன், அகோர வீரபுத்திரர், சன்னாசி, சப்த முனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், கலசஅபிஷேகமும் நடைபெற்று மலர் அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.