நெல் நாற்று நடும் பணி தீவிரம்

ராமநாதபுரம் அருகே நெல் நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-02-04 06:47 GMT
ராமநாதபுரம் ,
ராமநாதபுரம் அருகே நெல் நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாய பணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான அளவு மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு இருந்தனர். விதைத்த பயிர்கள் பலன் தரக்கூடிய நேரத்தில் சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் வயல்கள், விவசாய நிலங்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கின. 
இதனால் பயிரை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளதோடு அழுகி சாவியான பயிர்களுக்கு நிவாரணம் கோரியும் வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் யூனியன் அம்மன் கோவில் கிராமத்தில் விவசாயிகள் நெல் நாற்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அந்த பகுதி விவசாயி முருகேசன் கூறும்போது, 
கடந்த 15 வருடங்களாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். வழக்கமாக எங்கள் பகுதியில் சக்கரக்கோட்டை கண்மாய் நிறைந்த பிறகுதான் விவசாய பணிகளை மேற்கொள்வோம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே நெல் நாற்றுகளை பாவி வைத்து தற்போது நெல் நாற்றுகளை நட்டு வருகிறோம். 
மடைகளில் கசிவு
சக்கரக்கோட்டை கண்மாயின் பெரும்பாலான மடைகள் சேதம் அடைந்துள்ளன. கண்மாயும் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனினும் கண்மாய் நிரம்பி உள்ளதால் அதை நம்பி விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் பகுதியில் உள்ள மடைகளை நாங்களே சீரமைத்து தற்போது விவசாய பணிகளில்  ஈடுபட்டு வருகிறோம். சில பகுதி மடைகளில் கசிவு ஏற்பட்டு விவசாயிகள் விவசாயப் பணிகளில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே வரும் காலங்களிலாவது மடைகளை சீரமைத்து கண்மாயினை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்