கொடுமுடி அருகே மாணவனுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் ஜெயில்

கொடுமுடி அருகே மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update: 2021-02-04 05:39 GMT
கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 28-4-2019 அன்று பெற்றோரிடம் வயலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற மாணவன் பின்னர் வீடு திரும்பவில்லை. மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2-5-2019 அன்று சிறுவன் வீடு திரும்பினான். அப்போது மிகவும் சோர்ந்து போய் காணப்பட்ட சிறுவன் பெற்றோரை கண்டதும் கண்ணீர் விட்டு அழுதான். அவனிடம் விசாரித்தபோது, அவனுக்கு பழக்கமான வாலிபர் ஒருவர் ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவித்தான். உடனடியாக பெற்றோர் சிறுவனை கொடுமுடி போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி, போலீசாரிடம் விவரத்தை கூறினார்கள்.

தொழிலாளி சிக்கினார்

அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி வந்தனர். 3-5-2019 அன்று போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது, அந்த வழியாக நடந்து சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது 10-ம் வகுப்பு மாணவனை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் அந்த வாலிபர் என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தெரியவந்த விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிபேட்டை பெத்தநாயக்கன்பட்டி மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னாரபுலி. இவருடைய மகன் செங்கோட்டுவேல் (வயது 35). திருமணம் ஆகாதவர். கூலித்தொழிலாளியான இவர் கொடுமுடி அருகே சாலையோரங்களில் படுத்து வசித்து வந்தார். அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். செங்கோட்டுவேல் சிறு வயதில் இருந்தே சிறுவர்கள் மீது பாலியல் ரீதியாக தவறான நோக்கத்துடன் பழகி வந்து இருக்கிறார். இதனால் அவருடன் ஊரில் யாரும் நெருங்கி பழகவில்லை. எனவே ஊரைவிட்டு வெளியேறி கொடுமுடியில் தங்கி இருந்தார்.

சிறுவனுக்கு தொல்லை

அப்போது காவிரி ஆற்றுக்கு குளிக்க வரும் சிறுவர்களை நிர்வாணமாக பார்த்து ரசித்துவந்தார். அங்கு சம்பந்தப்பட்ட மாணவனும் குளிக்க வந்தபோது அவனைப்பார்த்து நெருங்கி பழகினார். அவ்வப்போது சிறுவனுக்கு உணவுகள் வாங்கிக்கொடுத்து தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்தார். செல்போனிலும் சிறுவனை நிர்வாணமாக படம் பிடித்து ரசித்து வந்தார். அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி உணவு பண்டங்கள் வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்து இருக்கிறார்.
இந்தநிலையில் சிறுவனை கடத்திச்செல்ல திட்டமிட்ட செங்கோட்டுவேல், ஈரோட்டுக்கு சென்று சினிமா பார்க்கலாம் என்று கூறி 28-4-2019 அன்று பஸ்சில் அழைத்து வந்து உள்ளார். பின்னர் திரைப்படத்துக்கு கூட்டிச்செல்லாமல் இன்னொரு பஸ்சில் நாமகிரிப்பேட்டைக்கு அழைத்துச்சென்று ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சிறுவனை அடைத்து வைத்தார். அங்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் சிறுவனை நிர்வாணப்படுத்தி கடும் பாலியல் தொல்லை கொடுத்தார். ஒரு கட்டத்தில் வலியால் அவன் துடித்ததால் 2-5-2019 அன்று அவனை அங்கிருந்து அழைத்து வந்து வீட்டின் அருகே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். சிறுவன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தால் அவர்கள் தேடிப்பிடித்து விடுவார்கள் என்று பயந்து ஊரைவிட்டு ஓடிவிட திட்டமிட்டு நடந்து சென்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.

27 ஆண்டு ஜெயில்

அதைத்தொடர்ந்துபோலீசார் செங்கோட்டுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது சிறுவனை கடத்தியதாகவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வந்ததால் ஈரோடு மகளிர் கோர்ட்டில் செங்கோட்டுவேல் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட செங்கோட்டுவேல் சிறுவனை கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட செங்கோட்டுவேலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் தலா 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆர்.மாலதி அந்த தீர்ப்பில் உத்தரவிட்டார். மொத்தம் 27 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலும் ஏக காலத்தில் தண்டனைகளை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.

27 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற செங்கோட்டுவேல் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சிறையில் அடைக்கப்பட்டவர். அவர் ஜாமீனில் வெளிவந்து, கொடுமுடியில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்