மின் வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-04 05:25 GMT
திருச்சி, 

திருச்சி தலைமை தபால் நிலையம் முன் நேற்று மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு எதிரான 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும், மின் வாரியத்தை தனியார்மயமாக்காமல் தொடர்ந்து பொதுத்துறையாகவே பாதுகாக்கவேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 -ஐ கைவிடவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.மலையாண்டி (தொ.மு.ச) சிவ.செல்வம் (ஊழியர் கூட்டமைப்பு) மற்றும் நிர்வாகிகள் தியாகராஜன், நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல், தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்