தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 187பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-04 02:45 GMT
திருப்பூர்,

கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 187பேரை போலீசார் கைது செய்தனர். பெண் ஊழியர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நேற்று காலை 2-வது நாளாக நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
187 பேர் கைது
மாநிலச் செயலாளர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினர். மாவட்ட இணைச்செயலாளர் திலிப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் அமர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையிலான போலீசார், 87 பெண்கள் உட்பட 187 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது அங்கிருந்த பெண் ஊழியர்களை, ஆண் போலீசார் கைகளை பிடித்து இழுத்து கைது செய்ததாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மனித உரிமைகள் ஆணையம்

பின்னர் இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் திலிப் மனித உரிமைகள் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்துள்ளார். அதில் 'மறியலில் ஈடுபட்ட பெண் ஊழியர்களை  போலீசார்  இழுத்து அராஜகமாக நடந்தனர். இதில் பெண் ஊழியர்களுக்கு கையில் ரத்தகாயம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உண்ணாவிரதம்

கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பெண் ஊழியர்களிடம் போலீசார் நடந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மதியம், போலீசார் அளித்த மதிய உணவை புறக்கணித்து மண்டபத்துக்குள் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்