புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல்

புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-04 00:16 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும்  காய்கறிகளை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உழவர் சந்தைக்கு வெளியே சிலர் இடங்களை ஆக்கிரமித்து தரைக் கடைகளையும், தள்ளுவண்டியில் கடைகளையும் அமைத்து இருப்பதால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

 உழவர் சந்தைக்கு வெளியே சிலர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் உழவர் சந்தைக்குள் கடை அமைத்திருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, உழவர் சந்தைக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும், மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், விரக்தி அடைந்த விவசாயிகள் நேற்று ஒன்றுகூடி உழவர் சந்தைக்கு வெளியே கடைகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், உழவர் சந்தைக்குள் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் உழவர் சந்தைக்கு அருகில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 

அதனை ஏற்காத விவசாயிகள் உழவர் சந்தை முன்பு உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும் என்று கூறி  உழவர்சந்தை நுழைவாயில் முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்தநிலையில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்தை நடத்தினார். அதன்பின்னர், ஆக்கிரமிப்பில் இருந்து கடைகளை அகற்ற உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். பின்னர் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்