காவிரி கூட்டுக்குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

காவிரி கூட்டுக்குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2021-02-03 21:41 GMT
துறையூர், 

துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக  காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள தோட்டங்களுக்கு சுமார் 2 கிேலா மீட்டர் தூரம் சென்று சென்று வந்தனர். அருகிலுள்ள தோட்ட கிணறுகளுக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பைகளிலும் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை இருந்து வந்தது. இந்நிலையில் ஊராட்சி தலைவர் திருமூர்த்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பாக பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 300 பேர் நேற்று திடீரென்று ஒன்று திரண்டு சாலையின் குறுக்கே காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூரில் இருந்து கோட்டாத்தூர்  செல்லும் பஸ் கோட்டாத்தூரிலிருந்து துறையூர் வரும் பஸ்களும் சுமார் ஒரு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்