திருச்சி விமானநிலையம் அருகே பரபரப்பு: கோவிலில் காவலாளியை கத்தியால் குத்திவிட்டு நகை, பணம் கொள்ளை
திருச்சி விமானநிலையம் அருகே கோவிலில் காவலாளியை கத்தியால் குத்திவிட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற 2 மர்ம வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையம் அருகே அண்ணா கோளரங்கத்திற்கு எதிரே பச்சநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினவேல் (வயது 63) காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம் போல் கோவில் கதவை உள்புறமாக பூட்டி விட்டு கோவிலின் உள்ளே படுத்து தூங்கினார். அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுமார் 18 வயது மற்றும் 22 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
சத்தம் கேட்டு எழுந்த காவலாளியை அவர்கள் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு அங்கு, உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தையும், அம்மனுக்கு சாத்தியிருந்த 2 தங்க நகைகளையும், காவலாளி வைத்திருந்த ரூ.4,500 ஆகியவற்றையும் கொள்ளை அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதைத்தொடர்ந்து அவர், நடந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், காவலாளியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவலாளியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.