மும்பை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு: தண்ணீருக்கு பதில் கிருமிநாசினியை குடித்த அதிகாரி
தண்ணீருக்கு பதில் கிருமிநாசினியை குடித்த அதிகாரியால் மும்பை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை மாநகராட்சியில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கூட்ட அரங்கில் உதவி கமிஷனரான ரமேஷ் பவார் என்பவரும் இருந்தார். அவர் தனது இருக்கையில் அமரும் முன்பு கையை சுத்தப்படுத்தும் ஒரு கிருமிநாசினி பாட்டிலை எடுத்து தனது மேஜையின் மீது வைத்தார்.
பட்ஜெட் தாக்கலாகி கொண்டு இருந்தபோது அவர் அந்த கிருமிநாசினி பாட்டிலின் மூடியை திறந்தார். பின்னர் திடீரென கிருமிநாசினியை எடுத்து குடித்து விட்டார். அடுத்த நொடியில் சுதாரித்து கொண்ட அவர், தான் குடித்தது தண்ணீர் அல்ல கிருமிநாசினி என்பதை உணர்ந்து திடுக்கிட்டார். மேலும் அதை விழுங்காமல் வாயிலேயே வைத்து கொண்டார். அப்போது அருகே இருந்த மற்ற ஊழியர்களும் அவரை உஷார்படுத்தினர்.
இதனால் அதிகாரி ரமேஷ் பவார் மாநகராட்சி கூட்ட அரங்கில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தார். அவருக்கு உதவி செய்ய மேலும் சிலரும் பின்னால் ஓடினர். பின்னர் வாயில் இருந்த கிருமிநாசினினை அவர் துப்பிவிட்டார். வாயை நன்றாக சுத்தம் செய்த பிறகு அவர் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த சம்பவத்தால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரி தண்ணீருக்கு பதில் கிருமிநாசினியை குடித்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகியது.
கிருமிநாசினி பாட்டில் தண்ணீர் பாட்டிலை போல இருந்ததால், அதை தவறுதலாக சம்பந்தப்பட்ட அதிகாரி ரமேஷ்பவார் குடித்து விட்டதாக மாநகராட்சி விளக்கம் அளித்தது.
யவத்மால் மாவட்டம் கப்சிகோப்ரி தாலுகாவில் சுகாதார பணியாளர்கள் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கிருமிநாசினியை கொடுத்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேறிய நிலையில், மாநகராட்சி அதிகாரி ஒருவர் தண்ணீருக்கு பதில் கிருமிநாசினியை குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.