தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு 18 ஆண்டுகளாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை அதிகாரிகள் ஜப்தி
கோவை காளப்பட்டியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு 18 ஆண்டுகளாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
சரவணம்பட்டி,
கோவை காளப்பட்டி நேருநகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதி பிரிவு குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வீட்டு எண்.107 கடந்த 2002-ம் ஆண்டு லோகநாதன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த வீட்டின் மதிப்பு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 600 எனவும், முன்பணமாக ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும். மேலும் மாத தவணையாக ரூ.10 ஆயிரத்து 402 செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், லோகநாதன் முன்பணத்தை செலுத்தி வீட்டை பெற்றுக்கொண்டார். பின்னர் ஒரு மாதம் தவணை தொகையை செலுத்தியதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து மாத தவணையை செலுத்தக்கோாரி வீட்டுவசதி வாரியம் சார்பில் லோகநாதனுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அதிகாரிகள் நேரில் சென்று வலியுறுத்தியும், அவர் பணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து 18 ஆண்டுகளாக மாத தவணை செலுத்தாததால் லோகநாதனுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டை ரத்து செய்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து லோகநாதன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் வீட்டு வசதி வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து லோகநாதன் சென்னையில் உள்ள வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனரை சந்தித்து தான் கட்டவேண்டிய தொகையில் 90 சதவீதத்தை 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் தந்து வீடுவதாகவும், மீதமுள்ள தொகையினை 2021-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதிக்குள் செலுத்திவிடுவதாக கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் அவர் கூறியபடி பணத்தை செலுத்ததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், லோகநாதன் குடியிருந்த வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்தனர்.
இதன்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நேற்று லோகநாதன் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். மேலும் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் கரிகாலன், விற்பனை மற்றும் சேவை மேலாளர் அருண், உதவி வருவாய் அலுவலர் கணேஷ்குமார், பீளமேடு போலீசார், தீயணைப்பு துறையினர், காளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் யமுனா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது அதிகாரிகள் கதவை தட்டியும் லோகநாதன் வீட்டை திறக்கவில்லை. மேலும் வீட்டில் உள்ளே இருந்தபடியே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அதிகாரிகள் வீட்டின் மின்இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கதவை உடைத்து, வீட்டின் உள்ளே சென்று லோகநாதன் அருடைய தந்தையை வீட்டில் இருந்து வெளியேற்றி, வீட்டை ஜப்தி செய்தனர்.
இதற்கிடையில் லோகநாதனின் தயார் திடீரென அங்கிருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.