கொட்டாம்பட்டி,
மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ஆசைத்தம்பி (வயது 26). ஆக்கி வீரரான இவர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு எழுதியுள்ளார். இந்தநிலையில் நண்பர்கள் கார்த்திக், ரமேஷ் ஆகியோருடன் ஆசைத்தம்பி மோட்டார் சைக்கிளில் கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் நடந்த திருமண விழாவிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் 3 பேரும் ஊர் திரும்பினர். அப்போது பள்ளபட்டி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசைத்தம்பி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கார்த்திக், ரமேஷ் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.