ஏரிகளில் வளர்க்க கொண்டு வரப்பட்ட மீன் குஞ்சுகள் செத்தன
விழுப்புரம் அருகே ஏரிகளில் வளர்க்க கொண்டு வரப்பட்ட மீன் குஞ்சுகள் செத்தன. இதனை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும், நிவர், புரெவி புயல்களால் பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள 70 சதவீத ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
அதில் மீன்களை வளர்க்க குத்தகை விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 45 ஏரிகளில் மீன் வளர்க்க குத்தகை விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டது.
மீன் குஞ்சுகள் செத்தன
அதன்படி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட ஏரிகளில் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள 1, 900 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரியில் மீன் வளர்க்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதையொட்டி ஏரியில் விடுவதற்காக நேற்று ஆந்திராவில் இருந்து கெண்டை, கட்லா, வவ்வால் உள்ளிட்ட 8 வகையான மீன் குஞ்சுகள் 1 லட்சத்து 80 ஆயிரம் எண்ணிக்கையில் 3 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன.
இதில் ஒரு லாரியில் இருந்த மீன் குஞ்சுகளை இறக்கி ஏரியில் விட முயன்றபோது ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அந்த மீன் குஞ்சுகளை ஏரிக்கரை பகுதியில் கொட்டப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து இறந்து கிடந்த மீன் குஞ்சுகளை சமைப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச்சென்றனர்.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வளவனூர் ஏரியில் விடுவதற்காக கொண்டு வரப்பட்ட மீன் குஞ்சுகளில் 1 லட்சம் மீன் குஞ்சுகள் வரை ஏரியில் விடப்பட்டன. மீதமுள்ள மீன் குஞ்சுகள் மிகச்சிறிய அளவில் இருந்ததால் அவற்றை ஏரியில் விடுவதற்கு அனுமதியளிக்கவில்லை. இதனால் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், பாதுகாப்பற்ற முறையில் கொண்டு வந்ததோடு ஆக்சிஜன் கியாசை நிறுத்திவிட்டதால் மீன் குஞ்சுகள் இறந்துள்ளன. அதற்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றே அவர்கள் ஆக்சிஜன் குறைபாடு செய்து விட்டு மீன் குஞ்சுகளை சாகடித்துள்ளனர். கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் இறந்திருக்கலாம். அதற்கு அவர்களே பொறுப்பு. கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் மற்ற ஏரிகளில் நல்ல முறையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றது என்றனர்.
இதுபற்றி ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கூறுகையில், நாங்கள் மீன் குஞ்சுகளை சரியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும்தான் கொண்டு வந்தோம். ஆனால் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வராமல் லஞ்சம் கேட்டு தாமதப்படுத்தியதாலே மீன் குஞ்சுகள் செத்துவிட்டதாக தெரிவித்தனர்.