போக்குவரத்து போலீஸ் நிலையத்தை தி.மு.க.வினர் முற்றுகை
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியதை கண்டித்து போக்குவரத்து போலீஸ் நிலையத்தை தி.மு.க.வினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியதை கண்டித்து போக்குவரத்து போலீஸ் நிலையத்தை தி.மு.க.வினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோட்டார் வாகன திருத்த சட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து புதுவை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் ஹெல்மெட் அணியாதது உள்பட பல்வேறு குற்றங்களுக்கு ஸ்பாட் பைன் வசூலித்து வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் சட்டத்தை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
திடீர் முற்றுகை
புதுச்சேரி போக்குவரத்து போலீசாரின் கெடுபிடிக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஹெல்மெட் அணிவது கட்டாயம் மற்றும் அபராத உயர்வை கண்டித்து நேரு வீதியில் உள்ள போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்தை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தெற்கு மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலவன், சக்திவேல், அருட்செல்வி, வடக்கு பொருளாளர் செந்தில்குமார், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், சீத்தாராமன், ராஜாராமன், கலிய கார்த்திகேயன், உப்பளம் சக்திவேல், இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீசை கண்டித்து கோஷம்
அப்போது போலீசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசார் தரப்பில், ஹெல்மெட் அணிவது தொடர்பாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையேற்று தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.