கயத்தாறு அருகே தொடர் மழைக்கு,உளுந்து, பாசிப்பயறு விளைச்சல் பாதிப்பு,விவசாயிகள் கவலை
கயத்தாறு அருகே தொடர் மழைக்கு 3 கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
கயத்தாறு:
கயத்தாறு அருகே தொடர் மழைக்கு 3 கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கயத்தாறு தாலுகா வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்தில் வலசால்பட்டி, சூரியமிணிக்கன், வெள்ளாளன்கோட்டை ஆகிய மூன்று கிராமங்களிலும் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர்.
இந்த மூன்று கிராமங்களிலும் சுமார் 2, 700 ஏக்கர் நிலத்தில் உளுந்து, பாசிப்பயறு மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் மானாவாரியாக பயிரிடப்பட்டு இருந்தது.
கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் நோய் பாதித்து, செடிகள் அனைத்தும் பட்டுவிட்டன. இதனால் இப்பகுதி விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது.
விளைச்சல் இல்லாத நிலையில் கருகிய பயிர்களை விவசாயிகள் ஆடு மாடுகளை விட்டு மேய்த்து வருகின்றனர். மேலும் உரமாக பயன்படுத்த அந்தச் செடிகளை அறுத்து குப்பைக்கிடங்கில் போடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் பகுதி விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.