சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி: கலெக்டர் செந்தில்ராஜ்-போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
தூத்துக்குடியில்நேற்று நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியில் கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பேரணி எம்.ஜி.ஆர். பூங்கா முன்பு இருந்து தொடங்கி பாளையங்கோட்டை ரோடு, குரூஸ்பர்னாந்து சிலை வழியாக பனிமயமாதா ஆலயம் அருகே முடிவடைந்தது. பேரணியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர்.
பேரணியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் எம்பவர் சங்கர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் குமார், பெலிக்ஸ்மாசிலாமணி, தாசில்தார் ஜஸ்டின், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டு உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் போது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகமாக நிகழ்ந்து வருகிறது. எனவே ஹெல்மெட் அணிவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிவது மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இருவருமே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அனைவரும் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் உயிர் சேதங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.