அம்பேத்கர் உருவ பலகை வைக்கக்கோரி வி.சி.க.வினர் சாலை மறியல்
விக்கிரவாண்டி அருகே அம்பேத்கர் உருவ பலகை வைக்கக்கோரி வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் மெயின்ரோடு பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் உருவ பலகையை சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அகற்றினர். அதே இடத்தில் அம்பேத்கர் உருவம் வரையப்பட்டிருந்த பலகையை மீண்டும் வைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த பலகையை வைக்கக்கூடாது என்று கூறி கிராம மக்கள் மற்றும் வர்த்தகர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி இருதரப்பினரிடம் தனித்தனியாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உரிய முடிவு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை 10 மணி அளவில் ராதாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், உடனடியாக அம்பேத்கர் உருவ பலகை வைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த போராட்டம் மதியம் 2.30 மணி வரை நீடித்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் தமிழ்செல்வி, டி.எஸ்.பி. நல்லசிவம், இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் தமிழ்செல்வி, பலகையை வைக்க அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து பஸ் நிறுத்தம் எதிர்புறம் அம்பேத்கர் உருவ பலகை வைக்கப்பட்டது. இதையடுத்து வி.சி.க.வினர் கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அம்பேத்கர் உருவ பலகையை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் வர்த்தகர்கள், கிராம மக்கள் திருக்கனூர் சாலையில் மாலை 3 மணி முதல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வருவாய்த்துறையினரும், போலீசாரும் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதற்கு வர்த்தகர்களும், கிராம மக்களும் அம்பேத்கர் உருவ பலகையை அகற்றினால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று திட்டவட்டமாக கூறினர். இவர்களது போராட்டம் இரவிலும் நீடித்தது.
இதனால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.