புதுச்சேரி மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி மலர சபதம் ஏற்போம்

புதுவை மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி மலர சபதம் ஏற்போம் என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

Update: 2021-01-31 23:01 GMT
புதுச்சேரி, பிப்.1-
புதுவை மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி மலர சபதம் ஏற்போம் என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் புதுவை ரோடியர் மில் திடலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச் சிவாயம் பேசியதாவது:-
சங்கடங்களை நீக்கும் நாள் 
புதுவை வரலாற்றில் இந்த நாள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் நன்னாள். விநாயகரை போற்றுகின்ற சங்கடகர சதுர்த்தி. அதாவது சங்கடங்களை நீக்கும் நாள். புதுவைக்கு ஜே.பி.நட்டா தமிழ் பாரம்பரியத்துடன் வந்துள்ளார். இது மக்களை மதிக்கும் விதமாக பார்க்கப்படுகிறது.
தமிழர் நாகரீகத்தை காப்பதுடன் இந்த கட்சியின் கொள்கை கோட்பாடு போன்றவை ஒரே குடும்பம்போன்று மக்களோடு மக்களாக வாழ தூண்டுகிறது. இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் இருந்தாலும் நாம்   பாரதத்தாயின்  தவப் புதல்வர்களாக வாழ்கிறோம். புதுவை மக்களின் சங்கடங்களை    தீர்க்கும்   விநாயகப் பெருமானாக   ஜே.பி.நட்டா வந்துள்ளார்.
தலைநிமிர செய்ய... 
பாரதீய ஜனதா கட்சியில் நான் இணைந்தபோது ஏன் இணைந்தீர்கள்? என்று என்மேல் அக்கறை கொண்டவர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நண்பர்களும் கேட்டார்கள். எங்களுக்கு துரோகம் செய்த முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் இருந்து வந்த எங்களை தாயுள்ளத்தோடு, பண்போடு வரவேற்றார்கள்.
புதுவை மாநிலத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்பதை உணர்த்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது மாநில வளர்ச்சிக்கான மாநாடு. முதல்-அமைச்சர் நாராயணசாமியின் நடவடிக்கையால் தாழ்ந்து கிடக்கும் புதுச்சேரியை தலைநிமிர செய்ய இந்த மாநாடு.
சபதம் ஏற்போம் 
என்னை ஏன் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தீர்கள்? என்கிறார்கள். புதுவையில் மாற்றத்தை உருவாக்க, மாநிலம் வளம்பெற, புதுவை மக்கள் நிம்மதியாக வாழ இங்கு தாமரை மலர்ந்தாக வேண்டும். அது மலரும்போது புதுவை மாநிலம் ஒளிரும்.
அப்போது புதுவை மக்களின் வாழ்க்கை தரம் உயரும். வருகிற சட்டமன்ற தேர்தலின்போது தாமரை ஆட்சி மலர நாம் சபதம் ஏற்போம்.
இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

மேலும் செய்திகள்