பேரூர் பட்டீசுவரர், மருதமலை முருகன் கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்

பேரூர் பட்டீசுவரர், மருதமலை முருகன் கோவிலில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அப்போது தானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று கூறினார்.

Update: 2021-01-31 14:29 GMT
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பிரகாரத்தை சுற்றி வந்தபோது எடுத்த
வடவள்ளி

கோவை மருதமலை முருகன் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

கொரோனாவில் இருந்து உலகம் விடுபடவேண்டும் என்று பழனி யில் சாமி தரிசனம் செய்துவிட்டு மருதமலை வந்து உள்ளேன். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் பெருமைபட வேண்டும். 

சென்ற ஆண்டு நாம் அனைவரும் பயத்தில் இருந்தோம். ஆனால் இந்த ஆண்டு பயத்தில் இருந்து விடுபட விஞ்ஞானிகள் வழிவகை செய்து இருக்கிறார்கள் அதற்காக நாம் அனைவரும் விஞ்ஞானி களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

முன் கள பணியாளர்களாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. இது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி ஊசியாக போடப்படுகிறது. இது பரிசோதனை அல்ல, இது அவர்களுக்கு அளிக்கும் பரிசு என்றுதான் நான் நினைக்கிறேன். 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் பயப்படக் கூடாது. டாக்டராக மட்டும் நான் பணியாற்றி இருந்தால் நானும் தடுப்பூசி போட்டு கொண்டிருப்பேன். தற்போது கவர்னராக இருப்பதால் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும்போது நானும் போட்டு கொள்வேன். 

தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததற்கு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவில் இருந்து மிக விரைவாக நாம் மீண்டு வந்ததற்கு பொதுமக்களுக்கும், வழி காட்டிய மத்திய அரசு மற்றும் அதை செயல்படுத்திய மாநில அரசுகளுக்கும் எனது நன்றி.
இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்  தனது குடும்பத்தினருடன் பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், பேரூர் கோவில் உதவி ஆணையர் விமலா வரவேற்பு கொடுத்தனர். 

பின்னர் கோவிலுக்குள் வந்த அவர் பட்டீசுவரர், பச்சைநாயகி, பால தண்டபாணி, நடராஜர் உள்ளிட்ட பிரகாரங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் பட்டீசுவரர் கோவில் யானை கல்யாணியிடம் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். 

அவருடன் கணவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்