ஆலை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணி அருகே அரிசி ஆலை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
ஆரணியை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 45). தொழில் அதிபரான அவர், அந்தக் கிராமத்தில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவருடைய மனைவி அஞ்சலா. கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. கணவரிடம் கோபித்துக் கொண்டு அஞ்சலா தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவார். கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மோகனசுந்தரம் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
அன்றே ஆரணி தாலுகா போலீசில் அஞ்சலா புகார் செய்தார். புகாரில், எனது கணவரை காணவில்லை. தேடி கண்டு பிடித்துத் தாருங்கள், எனத் தெரிவித்திருந்தார். நேற்று அரிசி ஆலை முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. பின் பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மோகனசுந்தரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து, பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.