தி.மு.க., பா.ஜ.க.வினர் தேர்தலுக்காக கையில் வேலை எடுத்துள்ளனர், சீமான் பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க., பா.ஜ.க.வினர் கையில் வேலை எடுத்துள்ளனர் என்று வேலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.;
வேலூர்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க., பா.ஜ.க.வினர் கையில் வேலை எடுத்துள்ளனர் என்று வேலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் வேலூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்களுக்கு பிரச்சினையே அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தான். பல ஆண்டுகளாக ஆட்சி செய்து மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் 100 நாட்களிலா தீர்க்கப்போகிறார்கள். பா.ஜ.க. ஆட்சியின் சாதனை, திட்டங்களை பற்றி பேச ஒன்றும் இல்லை. வட இந்தியாவில் ராமர், கேரளாவில் அய்யப்பன், தமிழகத்தில் முருகனை வைத்து பா.ஜ.க.வினர் பிரச்சினை செய்தார்கள்.
தேர்தலுக்காக கையில் வேலை எடுத்துள்ளனர்
நாங்கள் வேலை கையில் எடுத்தது பண்பாட்டுமீட்சி. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.வினர் தேர்தலுக்காக வேலை கையில் எடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக ஸ்டாலின் ஏன் வேலை கையில் எடுக்கவில்லை. பா.ஜ.க.வும் கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாக வேலை கையில் எடுக்கவில்லை. தற்போது எடுப்பது தேர்தலுக்காக என்பது வெளிப்படையாக தெரிகிறது. தமிழக மக்களுக்கு பிரச்சினையே திராவிட கட்சிகள் தான். அவர்களிடம் இருந்து தான் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
வேளாண் குடிமக்களின் கடனை ரத்து செய்ய வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காது. தனித்து தான் போட்டியிடும்.
7 பேர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது கவர்னர் கையெழுத்தில் இருக்கிறது. தேர்தல் லாபத்திற்காக செய்தாலும் 7 பேரையும் தயவுசெய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்று தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். சசிகலா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் தமிழக அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து தெரிவிக்க முடியும்.
இட ஒதுக்கீடு கொள்கையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசோடு துணை நிற்பேன். இடஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.