ஓசூரில் பப்ஜி கேம் விளையாடிய மாணவர் தற்கொலை
பப்ஜி கேம் விளையாடிய மாணவர் தற்கொலை
ஓசூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியை சேர்ந்தவர் தணிகைவேலு . இவருடைய மனைவி ஜெயலட்சுமி. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஓசூர் பாரதிதாசன் நகரில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இளைய மகன் ரவி (வயது 16). ஓசூர் தின்னூர் அரசு ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதில் ரவி அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து எப்போதும் பப்ஜி கேம் விளையாடி வந்தார்.
இந்தநிலையில் நேற்று தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம், மிஸ் யூ என ஸ்டேட்டஸ் வைத்த ரவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் மாணவனின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பப்ஜி கேம் விளையாட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.