கரூரில், விவசாயிகள் உண்ணாவிரதம்
டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூரில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டியும், விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைப்பதை கண்டித்தும் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார். தமிழக அரசு விவசாயிகள் மீதான விரோத போக்கை கைவிட வேண்டும். திருவாரூரில் விவசாய சங்க மற்றும் விவசாய ஆதரவு தலைவர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பலர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.