கோவில்களில் அம்மன் தாலியை திருடிய வாலிபர் கைது

காரைக்குடி பகுதியில் உள்ள கோவில்களில் அம்மன் தாலியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-31 05:54 GMT
காரைக்குடி, 

காரைக்குடி பகுதியில் உள்ள கோவில்களில் அம்மன் தாலியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அம்மன் தாலி திருட்டு
காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மன் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்கத்தாலியை திடீரென காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பர்மா காலனி அருகே உள்ள வீரமாகாளி அம்மன் கோவிலில் சாமி கழுத்தில் இருந்த 14 கிராம் தங்க தாலி காணாமல் போனது. இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து அம்மனின் தாலி காணாமல் போன சம்பவங்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண் பக்தர்கள் இது குறித்து பெரும் கவலையடைந்து விரதங்கள், பரிகாரங்களை மேற்கொண்டனர். 

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய ஆசாமி
காரைக்குடி தெற்கு போலீசார், விசாரணையின் ஒரு பகுதியாக கணேசபுரம் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பேண்ட் சர்ட் அணிந்த வாலிபர் கோவிலுக்கு வருவதும், பயபக்தியோடு அம்மனை வழிபடுவதும், கோவில் பிரகாரத்தை சுற்றி வருவதும், சுற்றி யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் கருவறைக்குள் புகுந்து அம்மனின் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க தாலியை எடுத்துக்கொண்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கேமரா பதிவுகளை கொண்டு அம்மனின் தாலியை திருடிய நபரை போலீசார் தீவிரமாக தேட தொடங்கினர். 
அப்போது கழனிவாசல் வாரச்சந்தை அருகில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தவரைப்போல் ஒருவர் மோட்டார் சைக்கிளோடு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அதனால் அவரை தெற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
வாலிபர் கைது
அப்போது அவன் கரூர் அருகே உள்ள கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்லத்துரை (வயது 26) என்று தெரியவந்தது. அவரே காரைக்குடியில் 2 கோவில்களிலும் அம்மன் தாலிகளை திருடியதும் தெரியவந்தது. அவன் கொடுத்த தகவலின் பேரில் அம்மன் தாலிகள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட செல்லத்துரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்