போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 4 வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூாில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், அதிக பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் அந்த வாகனங்கள் மீதும், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவர், அந்த வழியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த 2 வாகனங்களையும், தகுதிச்சான்று புதுப்பிக்காத 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தார். மேலும் பெரம்பலூரில் அதிக அளவு மணல் ஏற்றி வந்த ஒரு லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதித்தார்.