ஆத்தூர் அருகே அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை வயலில் கால்நடைகள் மேய்ந்த தகராறில் விபரீதம்

former murder அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை

Update: 2021-01-31 05:43 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே வயலில் கால்நடைகள் மேய்ந்த தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக்கொன்ற உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விவசாயி
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியக்கரையை அடுத்த கோபாலபுரம் கிராமம் வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி சங்கீதா. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 
இவர்களுக்கு 6 வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும், 4 வயதில் பூபதி என்ற மகனும் உள்ளனர். தனது மகன், மகள், தாயார் செல்லம்மாளுடன் பெரியசாமி வசித்து வந்தார்.
சரமாரி அரிவாள் வெட்டு
இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடு, மாடுகள் அருகில் உள்ள உறவினரான விவசாயி சந்திரசேகரனின் (45) வயலில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சந்திரசேகரனுக்கும், பெரியசாமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் முன்விரோதமாக மாறியது.
நேற்று முன்தினம் இரவு விவசாய நிலம் அருகே பெரியசாமிக்கும், சந்திரசேகரனுக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெரியசாமியின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். 
பரிதாப சாவு
இதில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில், மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும்  தலைமறைவான சந்திரசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆத்தூர் அருகே வயலில் கால்நடைகள் மேய்ந்த தகராறில் விவசாயியை உறவினரே அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்