நெல்லையப்பர் கோவில் தெப்ப திருவிழா- திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவு தெப்ப திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2021-01-31 05:41 GMT
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று நடந்தது இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழா
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடந்தன. கடந்த 22ஆம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி உடன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கடந்த 28-ந் தேதி தைப்பூச தீர்த்தவாரியும், நேற்று முன்தினம் நடராஜர் திருநடன காட்சி வைபவமும் நடந்தது.
தெப்பத்திருவிழா
விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடந்தது. இதையொட்டி தெப்பம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பின்னர் சுவாமி, அம்பாள் புறப்பட்டு தெப்பத்திருவிழா மண்டபத்திற்கு வந்தனர். அவருடன் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் வந்தனர்.
தெப்பத்திருவிழா மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் சுவாமி-அம்பாள், பஞ்சமூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்தனர். நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சுவாமி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

மேலும் செய்திகள்