அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடிவலைகளை சேதப்படுத்தும் வெளி மாவட்ட மீனவர்கள்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தும் வெளி மாவட்ட படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிராம்பட்டினம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம்:-
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தும் வெளி மாவட்ட படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிராம்பட்டினம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நண்டு வலைகள்
தஞ்சை மாவட்ட கடற்்பகுதியில் அதிராம்பட்டினம் கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கித்தெரு, தரகர்தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித்தொழில் செய்துவருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் நண்டு வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் முதல் நாள் கடலுக்கு சென்று வலைகளை கடலில் பரப்பிவிட்டு கரைதிரும்புவார்கள். மறுநாள் அவர்கள் வலைகளையும் அதில் பிடிபட்ட மீன்களையும் எடுத்துவருவார்கள்.
வலைகள் சேதம்
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடற்்பகுதிக்குள் நுழையும் வெளிமாவட்ட மீனவர்கள்
அரசால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதோடு கடலில் இருந்து 2 பாகத்தொலைவில் கரைப்பகுதிகளிலும் மீன்பிடித்துவருகின்றனர். கடலில் மீன்பிடிக்க போட்டுவந்த நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தி சென்றுவிடுகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.
புகார்
அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கித்தெரு, தரகர் தெரு, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட வலைகளை அறுத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை சேதமான மீனவர்களின் வலைகளின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து இப்பகுதி மீனவர்கள் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மீன்வளத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதிராம்பட்டினம் பகுதி மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெளி மாவட்ட மீனவர்கள் சேதப்படுத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.