ஆரணியில் 2-வது நாளாக பரபரப்பை ஏற்படுத்திய டிராபிக் ராமசாமி
சமூக அவலங்களை தட்டி கேட்டு ஆரணியில் 2வது நாளாக டிராபிக் ராமசாமி பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆரணி
சமூக அவலங்களை தட்டி கேட்டு ஆரணியில் 2-வது நாளாக டிராபிக் ராமசாமி பரபரப்பை ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நகரில் போக்குவரத்து நெரிசல், கழிவறையில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள நம்ம டாய்லெட் ஆகியவை குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஆரணிக்கு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியிடம் சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்க தலைவர் அருண்குமார் புகார் தெரிவித்ததன் பேரில் இன்று 2-வது நாளாக டிராபிக் ராமசாமி ஆரணி நகரை சுற்றிப்பார்த்தார்.
ஆரணி காந்தி ரோடு பகுதியில் சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பஸ் நிலையங்களில் உள்ள நம்ம டாய்லெட் ஏன் பயன்பாட்டுக்கு வரவில்லை? என நகராட்சி அலுவலக மேலாளர் நெடுமாறனிடம் கேட்டார்.
நகராட்சி கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை பார்த்தார். கூடுதல் கட்டணம் வசூலிக்க சொன்னது யார்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பயனற்ற இருசக்கர வாகனத்தை பொருத்தி 3 சக்கர வாகனமாக மாற்றி அதில் மீன் பாரம் ஏற்ற பயன்படுத்தப்பட்டு வந்ததை பார்த்த டிராபிக் ராமசாமி, அதில் 3 வாகனங்களை கைப்பற்றி போலீசில் ஒப்படைத்து, புகார் செய்தார்.
ஆரணி நகரை சுற்றி பார்த்து, சமூக அவலங்களை சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்டதன் மூலம் டிராபிக் ராமசாமி 2-வது நாளாக பரபரப்பை ஏற்படுத்தினார்.