வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
ராமநாதபுரம் அருகே காதலியை பிரித்துவிடுவார்கள் என பயந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே உள்ள சேனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் பொன்சூர்யா (வயது 20) என்பவர் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீசார் விசாரணைக்காக சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு வாலிபரை அழைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு வந்தார்களாம். போலீசார் விசாரணையின் போது ஊர்பிரமுகர்கள் மற்றும் போலீசார் சிறுமியாக இருப்பதால் 18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுத வாலிபர் காவல் நிலையத்தில் ஊர்கார்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் விஷம் அருந்த இருவரும் முடிவு செய்ததாகவும் தான்மட்டும் சாயல்குடி அருகே மதியம் சாப்பிட்டபோது விஷம் கலந்து சாப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்தாராம். இதானால் பதற்றம் அடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் வாலிபரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். டாக்டர்கள் வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.