திருவண்ணாமலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்
திருவண்ணாலை, ஆரணி, வந்தவாசியில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொ.மு.ச, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ,சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்துக்கழக பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும். நிலுவை அகவிலைப்படி தொகையை உடனே வழங்க வேண்டும்.
ஓய்வூதிய நிலுவைகளை வழங்க வேண்டும். இரட்டிப்பு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உண்ணாவிரத போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணி-ஆற்காடு சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு எல்.பி.எப், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஏ.எல்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க மண்டல தலைவர் எஸ்.வி.குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அதில் பங்கேற்றோர், தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும், நிலுவை அகவிலைப்படியை வழங்க வேண்டும், ஓய்வூதிய நிதியை வழங்க வேண்டும், விடுப்பு வஞ்சனை செய்யாதே, இரட்டிப்பு பணியை வாங்க வேண்டாம் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை நிறைவடைந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான தேதியை உடனே அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல தொழிற்சங்க ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மண்டல இணைச் செயலாளர்கள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கினர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் சி.ஐ.டி.யூ, எல்.பி.எப், ஐ.என்.டி.யூ.சி. ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.