சேதமடைந்த சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?

அருப்புக்கோட்டை பகுதியில் சேதமடைந்த சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2021-01-30 16:48 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருந்தமடம், ஆமணக்குநத்தம், வெள்ளையாபுரம், திருவிருந்தாள்புரம், மலைப்பட்டி, சுக்கிலனத்தம், மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்களில் வெள்ளைச்சோளம் பயிரிடப்பட்டது. 

பயிரிடப்பட்ட இந்த சோள பயிர்கள் அனைத்தும் விளைந்து கதிர் முற்றி இருந்தது. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். 
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையின் காரணமாக பயிர்கள் அனைத்தும் கருகி போய் விட்டது. 

இதுகுறித்து குருந்தமடம் பகுதியை சேர்ந்த விவசாயி ரகுபதி கூறியதாவது:- 
 ஆண்டுதோறும் எங்கள் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் அதிகமான விவசாயிகள் சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிர்களை பயிரிட்டு பலன் அடைந்து வந்தோம். 

இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை சோளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளத்தை பயிரிட்டோம். 

சில மாதங்களில் கதிர்கள் விளைந்து விவசாயிகள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.  இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் இந்த சோளப் பயிர்கள் அனைத்தும் அழுகத் தொடங்கியது. கடன் வாங்கி விவசாயம் செய்த நாங்கள் கதிர்கள் அழுகியதால் கவலையில் உள்ளோம். 

நிலங்களில் காய்ந்த நிலையில் உள்ள சோளப்பயிர்களை அகற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளோம். 

இதனால் பல விவசாயிகள் காய்ந்த சோளப் பயிர்களை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். கடன் வாங்கி சாகுபடி செய்தவர்கள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிைல ஏற்பட்டு விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்