பொள்ளாச்சியில் இறந்த கோழிகளை வைத்திருந்த இறைச்சி கடைக்கு சீல்

பொள்ளாச்சியில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க இறந்த கோழிகளை வைத்திருந்த இறைச்சி கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-01-30 23:00 GMT
பொள்ளாச்சியில் இறைச்சி கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்த போது எடுத்த படம்.
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இறந்த கோழிகளை வைத்து விற்பனை செய்வதாக பொள்ளாச்சி தாசில்தார் தணிகைவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் பேரில் வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோர் நேற்று காலை அந்த கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு இறந்த கோழிகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இறந்த மற்றும் உயிரோடு இருந்த கோழிகளை பறிமுதல் செய்தனர். பின்னர்  வருவாய் துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆனைமலையை சேர்ந்த முகமது ஆதம் என்பவர் இறைச்சி கடையை நடத்தி வருகிறார். இந்த கடையை வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மட்டும் திறப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக தீவனம் இல்லாமல் கோழிகள் இறந்து விடுவதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் வந்தது.

 அதன்பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடையில் இருந்த 25 கோழிகளில் 15 கோழிகள் நோய் தாக்கி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த இறந்த மற்றும் உயிருடன் உள்ள கோழிகளை  பறிமுதல் செய்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பறவை காய்ச்சல் பாதிப்பு கேரளாவில் உள்ளது. இதன் காரணமாக இறந்த கோழிகளை கடைக்குள் வைத்திருக்க கூடாது. 

கோழிகளுக்கு முறையாக தீவனம் வழங்க வேண்டும். கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இறந்த கோழிகள் இருப்பது தெரியவந்தால், கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்