தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தில் நவீன ரேடார் கருவி

தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தில் நவீன வசதி கொண்ட ரேடார் கருவி பொருத்தப்படுகிறது. பார்வையாளர்கள் வசதிக்காக லிப்ட் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-01-30 07:06 GMT
தனுஷ்கோடி கடற்கரையில் கட்டப்பட்டு வரும் கலங்கரை விளக்கத்தை படத்தில் காணலாம்.
ராமேசுவரம், 
தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தில் நவீன வசதி கொண்ட ரேடார் கருவி பொருத்தப்படுகிறது. பார்வையாளர்கள் வசதிக்காக லிப்ட் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
கலங்கரை விளக்கம்
புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.8 கோடி நிதியில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் கலங்கரை விளக்க துறையின் சார்பில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டும் பணியானது தொடங்கியது.
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் தனுஷ்கோடி கடற்கரையில் கலங்கரை விளக்க பணிகள் நடைபெறவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பணிகள் ஜூன் மாதம் முதல் தொடங்கின..
சுற்றுச்சுவர்
அதன் பின்னர் பணிகள் மும்முரமாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள பணிகள் இன்னும் 4 மாதத்தில் முடிவடையலாம் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது கலங்கரை விளக்கத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதுடன், அதன் உள்பகுதியில் லிப்ட் அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த லிப்ட் மூலம் பார்வையாளர்கள் கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதிக்கு சென்று கடல் அழகை ரசிக்க முடியும்.
மேலும் இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் 18 கடல் மைல் தூரத்திற்கு ஒளி வீசும் வகையில் அதிக திறன் கொண்ட மின்விளக்கும் அமைக்கப்பட உள்ளது. மீனவர்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நவீன ரேடாரும் பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்டிடம்
1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயலில் தனுஷ்கோடி நகரம் அழிந்து, 56 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கடற்கரையில் கட்டப்பட்டு வரும் முதல் கட்டிடம் இந்த கலங்கரை விளக்கம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்