நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்ஆகாதது ஏன்? என வேலூரில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார்.
வேலூர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்? என வேலூரில் நடந்த அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார்.
சிலைகள் திறப்பு
வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் உருவ சிலைகள் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அத்துடன் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் உருவ சிலைகளை திறந்து வைத்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு மாநகர தி.மு.க. சார்பில் 1½ கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வீரவாள் பரிசளிக்கப்பட்டது.
தி.மு.க. வெற்றி பெறும்
அதைத்தொடர்ந்து விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வேலூர் என்பது வீரம், விவேகம் நிறைந்த மண். சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது. இப்படிப்பட்ட ஊரில் இரு முக்கிய தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவிடம். கொள்கை, லட்சியத்தில் மாறுபாடு இருந்தாலும் அதை விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை. அவர் மறைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் மறைந்தபோது பன்னீர்செல்லம் முதல்-அமைச்சர் பதவி ஏற்றார். பின்னர் திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது. பின்னர் சசிகலா முதல்-அமைச்சர் பொறுப்பேற்க கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருந்தபோது சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் 27-ந் தேதிதான் விடுதலை ஆகி இருப்பார்.
அவர் மறைந்த பின்னர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார்
. அவரது ஆவியுடன் பேசினார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சைகள் குறித்த செய்தி வெளியிடவில்லை. மாறாக அவர் இட்லி சாப்பிட்டார் என்று கூறினார்கள்.
மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் ஏன் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவை அவர்கள் அடிக்கடி பல இடங்களில் நினைவு கூறுகிறார்கள். ஆனால் அவரது மரணத்தை கண்டுபிடிக்க யோக்கியதை இல்லை. அவர்களுக்கு, ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க என்ன யோக்கியதை உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மக்கள் பிரச்சினைகளுக்கு...
கொரோனா காலத்திலும் மக்களை சந்தித்த ஒரே கட்சி தி.மு.க. தான். இதை எந்த கட்சியும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாட்களில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான சாலை வசதி, போக்குவரத்து, ஓய்வூதியம், பட்டா, குடிநீர் போன்றவற்றுக்கு தீர்வு காணப்படும். இதை நான் உறுதியோடு கூறுகிறேன். நான் முதல்-அமைச்சர் ஆன பிறகு மக்கள் அளித்த மனுக்கள் உள்ள பெட்டி திறக்கப்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.