காதலிக்க சொல்லி மிரட்டல்: பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
காதலிக்க சொல்லி மிரட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார்.
வாழப்பாடி,
வாழப்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் 15 வயது நிரம்பிய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 19) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இதனால் சம்பவத்தன்று தன்னை காதலிக்க சொல்லி விக்னேஷ் மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை காதலிக்க வில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் வேதனை அடைந்த மாணவி நேற்று காலை வீட்டில் இருந்தபோது மண்எண்ணெய் ஊற்றி தனது உடலில் தீ வைத்து கொண்டார். வலியால் அலறி துடித்த மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று சிறுமியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை தேடி வருகின்றனர். காதலிக்க சொல்லி மிரட்டியதால் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.