வீட்டிற்குள் பதுங்கிய பாம்பு சிறுவனை கடித்ததால் பரபரப்பு
வீட்டிற்குள் பதுங்கிய பாம்பு சிறுவனை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நொய்யல்,
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள கே.எஸ். ரைஸ்மில் தெருவை சேர்ந்த முத்துகுமார்பெருமாள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று, அவரது 12 வயது மகனை கடித்தது. இதில் மயக்கம் அடைந்த அந்த சிறுவனை, உறவினர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து அறைக்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பைக்குள் அடைத்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதேபோல, புகளூர் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த சேகர் வீட்டுக்குள் பதுங்கிய பாம்பையும் தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.