கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் தி.மு.க.வினர் 4 பேர் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவு
தொண்டாமுத்தூரில் தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல் தொடர்பாக தி.மு.க.வினர் 4 பேர் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிட்டுள்ளது.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் கடந்த 2-ந் தேதி தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் பூங்கொடி என்பவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்டார்.
அப்போது அவர் தன்னை தி.மு.க.வினர் தாக்கியதாக கூறி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தொண்டாமுத்தூர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், சாமியப்பன, ரங்கசாமி, பெருமாள் ராஜா ஆகிய 4 பேர் மீது வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. நிர்வாகிகள் 4 பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கோவை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து 4 பேரும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வக்கீல் அருள்மொழி மூலம் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் 4 பேரும் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.
அன்று அரசு வக்கீல், தொண்டாமுத்தூர் கோட்ட துணை சூப்பிரண்டு, புகார் அளித்த பூங்கொடி ஆகிய 3 பேரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.